நீரிழிவு நோயாளிகளுக்கான குடைமிளகாய் மற்றும் சீஸ் சப்பாத்தி

நீரிழிவு நோயாளிகளுக்கான குடைமிளகாய் மற்றும் சீஸ் சப்பாத்தி


நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு உணவை சாப்பிட வேண்டுமானாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உணவில் சரியாக கவனம் செலுத்தாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, நிலைமை மோசமாகிவிடும். அத்தகையவர்களுக்கு குடைமிளகாய் மிகவும் சிறந்த உணவுப் பொருள். குடைமிளகாயை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். ஆகவே அத்தகைய குடைமிளகாய் கொண்டு, சூப்பரான முறையில் ஒரு சாப்பாத்தி செய்யலாம். இந்த சப்பாத்திக்கு குடைமிளகாய் மற்றும் சீஸ் சப்பாத்தி என்று பெயர். இப்போது அந்த குடைமிளகாய் மற்றும் சீஸ் சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
குடைமிளகாய் - 3 கப் (நறுக்கியது)
சீஸ் - 1 கப் (துருவியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஈரமான துணியால் மூடி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு பாத்திரத்தில் குடைமிளகாய், சீஸ், மிளகாய் தூள், மல்லி தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது குடைமிளகாய் கலவையை வைத்து மூடி, மீண்டும் மெதுவாக அதனை சப்பாத்தி போன்று கலவை வெளிவராதவாறு தேய்க்க வேண்டும். இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான குடைமிளகாய் மற்றும் சீஸ் சப்பாத்தி ரெடி!!!