உப்புக்கண்டம் குழம்பு

உப்புக்கண்டம் குழம்பு

தேவையானவை:

உப்புக்கண்டம் (பதமாக காய வைத்த ஆட்டுக்கறி) - அரைக்கிலோ

நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

சோம்பு - அரை டீஸ்பூன்

சின்னவெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 75 கிராம்

இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

சீரகத்தூள்- ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - 1 (அரைத்து வைக்கவும்)

செய்முறை:

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை முழுதாகப் போட்டு குறைந்த தீயில் நிறம் மாற வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளியை இதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். மஞ்சள்தூள், இரண்டாக உடைத்த இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, அடுப்பை அணைத்து ஆற விட்டு மிக்ஸியில் மைய அரைத்து வைத்தால் மசாலாவுக்கான கிரேவி ரெடி.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், கடுகு, சோம்பு, மீதம் இருக்கும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு, உப்புக்கண்டம், தேவையான உப்பு சேர்த்து இருபது நிமிடம் நன்கு கொதிக்க விடவும். உப்புக்கண்டம் வெந்ததும் அரைத்த தேங்காய் சேர்த்து, பத்து நிமிடம் கொதிக்க விடவும். பின்பு அடுப்பை அணைத்துப் பரிமாறவும்.